காமன்வெல்த் போட்டிகள்: பாரா-தடகள பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து அசத்திய கவிட், பாசில்

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
Dilip Gavit and Mohammed Basil
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் பாரா-தடகளப் பிரிவில், ஆண்களுக்கான 100 மீட்டர் T47 இறுதி போட்டியில் திலீப் மஹாது காவிட் தங்க பதக்கத்தையும், முகமது பாசில் மொர்சிங்கனகாத் வெள்ளி பதக்கத்தையும் வென்று, இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது.

காவிட் 10.71 வினாடிகள் என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து, போட்டித் தொடரின் சாதனையையும் தனது இந்த சீசனின் சிறந்த நேரத்தையும் பதிவு செய்து தெளிவான முன்னிலையுடன் முதலிடத்தை பிடித்தார். அதேவேளையில், கடும் போட்டி நிலவிய பந்தயத்தில் பாசில் 10.83 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் 10.85 வினாடிகள் என்ற தனது சீசனின் சிறந்த நேரத்தைப் பதிவு செய்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

தங்கப்பதக்கம்:

மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு மற்றும் மகளிருக்கான F57 பாரா-தடகள குண்டு எறிதல் பிரிவில் ஷர்மிளா தன்கர் ஆகியோர் பெற்ற வெற்றிகளை தொடர்ந்து, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வென்ற மூன்றாவது தங்க பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான 100 மீட்டர் T47 என்பது ஒரு பக்க கையின் செயல்பாடு அல்லது வலிமை பாதிக்கப்பட்டுள்ள அல்லது கை இல்லாத குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாரா-தடகள விரைவோட்ட (sprint) போட்டியாகும்.

ஒன்பது பதக்கங்கள்:

ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவின் குத்துச்சண்டை அணி மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இதன்மூலம், நாடு உறுதிசெய்த பதக்கங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தோடு, 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற ஒட்டுமொத்த குத்துச்சண்டை பதக்கங்களின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), அங்குஷ் பங்கல் (80 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) ஆகியோர், லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (55 கிலோ) ஆகியோருடன் தத்தமது பிரிவுகளில் கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com