

நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்குவார்.
இருப்பினும், வெற்றி பெறும் அணியால் அசல் கோப்பையை வைத்துக்கொள்ள முடியாது, அதற்குப் பதிலாக தற்போதைய ஃபிஃபா உலகக் கோப்பையின் ஒரு மாதிரி பிரதியை பெறும்.
1974-இல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட அசல் கோப்பை, ஃபிஃபாவிற்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு பரிசாக உள்ளது.
இந்த கோப்பை இரண்டு முறை திருடப்பட்டிருப்பதால், வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் நாட்டு தலைவர்களை தவிர வேறு பலர் அதை தொட அனுமதிக்கப்படுவதில்லை.
கொண்டாட அனுமதி:
அசல் கோப்பையானது ஸ்பெயின் அல்லது அர்ஜென்டினாவுக்கு வழங்கப்படும். மேலும், ஃபிஃபா அதனை சுவிட்சர்லாந்தில் உள்ள தனது தலைமையகத்திற்கு எடுத்து செல்வதற்கு முன்பு, வீரர்கள் ஆடுகளத்தில் அதனுடன் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வெற்றி பெற்ற அணி அசல் கோப்பையை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்படாது என்பதால், அதற்கு பதிலாக ஃபிஃபா உலகக் கோப்பையின் ஒரு மாதிரி பிரதியை ஃபிஃபா வழங்கும்.
பல அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கிளப் உலக கோப்பையில் செய்தது போலவே, உலக கோப்பை வெற்றியாளர்களுடன் கோப்பையை ஏந்தி செல்ல டிரம்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வலியுறுத்தல்:
டிரம்ப் உலகக் கோப்பையை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார், மேலும் தற்போதைய பதிப்பைத் தனது அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து நடத்தியுள்ள நிலையில், அடுத்த பதிப்பை அமெரிக்கா தனியாக நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்.
இறுதிப் போட்டிக்கு முன்பு ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை வரவேற்றபோது, "நீங்கள் (ஃபிஃபா தலைவர்) மீண்டும் அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை கனடாவையும் மெக்சிகோவையும் நாம் விலக்கி விடுவோம்," என்று டிரம்ப் கூறினார்.