

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், குரூப் சி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் பிரேசில், மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி ஒரு கோல் அடித்தார். இதனால் 1-0 என மொராக்கோ அணி முன்னிலை பெற்றது.
சிறிது நேரத்தில் ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் ஒரு கோல் என சமனிலை பெற்றன.
தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிகள் மேற்கொண்டன. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன.
முடிவில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில் பிரேசில், மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.