

திருவனந்தபுரம்:
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி காட்சி போட்டியில் பங்கேற்க கேரளம் வருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக விளையாட்டுத்துறை மந்திரி வி.அப்து ரகுமான் கூறியுள்ளார்.
கேரளம் மாநில விளையாட்டுத்துறை சார்பில், கொச்சியில் கடந்த மாதம் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி பங்கேற்கும் காட்சி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை விளையாட்டுத்துறை மந்திரி அப்து ரகுமான் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.
இதையொட்டி ரூ.250 கோடி நிதியும் திரட்டப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அணியின் கேரளம் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அர்ஜென்டினா அணி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக நேற்று ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் மந்திரி அப்து ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளம் வந்து காட்சி போட்டியில் விளையாட வேண்டும் என்பது அனைவரது விருப்பம். அதற்காக நாங்கள் பலமுறை கலந்து பேசினோம். உலக அளவில் புகழ்பெற்ற வீரர் மெஸ்சி கலந்து கொள்ளும் இந்த காட்சி போட்டி நமது கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. அந்த தலைசிறந்த அணியை அழைத்து வர தேவையான ரூ.250 கோடி நிதியை கடும் சிர மங்களுக்கு மத்தியில் திரட்டினோம்.
போதிய நிதி ஏற்பாடு செய்து வழங்கப்பட்ட நிலையில் அர்ஜென்டினா அணி எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பணம் கொடுத்த பிறகு அந்த அணி எங்களை ஏமாற்றி விட்டது. அவர்களிடம் இருந்து இப்படியொரு துரோகத்தை எதிர்பார்க்கவில்லை.
இது தொடர்பாக, நாங்கள் விசாரித்த போது அர்ஜென்டினா அணி இதுபோல் மேலும் சில நாடுகளிடம் பணம் பெற்றுக் கொண்டு விளையாட செல்லாமல் ஜகா வாங்கி இருப்பது தெரிய வந்தது.
தற்போது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அவர்கள் எங்களுக்கு இழப்பீடு தந்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.