

இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் வரவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.
விளையாட்டு மற்றும் நீதியின் நலனைக் கருத்தில் கொண்டு வினேஷ் போகத்திற்கு இந்த வாய்ப்பை வழங்குவது மிக அவசியம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த மே 18 அன்று தனி நீதிபதி ஒருவர் வினேஷ் போகத் தகுதிச் சுற்றில் பங்கேற்கக் கோரிய இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்திருந்தார். அதனை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்த வழக்கில், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது இந்தச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவின்படி, இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) வரும் மே 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ள தகுதிச் சுற்றுத் தேர்வுகளில் வினேஷ் போகத் நேரடியாகப் பங்கேற்கலாம்.
மேலும், இந்தத் தேர்வு நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய, ஒட்டுமொத்தப் போட்டிகளையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றின் சார்பாகச் சுதந்திரமான பார்வையாளர்கள் அங்கு நேரில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, பிரசவக் கால விடுப்பு காரணமாக வினேஷ் போகத் விளையாட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டி மல்யுத்த சம்மேளனம் அவரை தகுதிச் சுற்றில் சேர்க்க மறுத்திருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மல்யுத்த சம்மேளனத்தின் கொள்கைகள் ஒருதலைப்பட்சமாக உள்ளதாகச் சாடினர்.
பிரசவ விடுப்பு எடுத்த வினேஷ் போகத் போன்ற நாட்டின் பெருமைக்குரிய 'ஐகானிக்' வீராங்கனைகளை அனுமதிப்பதற்கான எந்த ஒரு நெகிழ்வுத்தன்மையையும் சம்மேளனம் தங்களுக்குள் வைத்திருக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்ததோடு, சம்மேளனம் அவருக்கு அனுப்பிய விளக்கம் கேட்கும் நோட்டீஸ் முன்பே திட்டமிடப்பட்டது போல் உள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரீஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.
ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காலையில் எடையிடும் போது, அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி அவர் துரதிர்ஷ்டவசமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தப் பெரிய ஏமாற்றத்திற்குப் பிறகு, தற்போது நீதிமன்றம் அளித்துள்ள இந்த அதிரடி உத்தரவு அவர் மீண்டும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதிக்கப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.