

ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.
முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.