மகளிர் டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார். அயர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
மகளிர் டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி நிதானமாக ஆடினர்.

2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமானது. எனவே, போட்டி கைவிடப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி தோல்வியை முடிவு செய்தனர். அதன்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார்.

இதன்மூலம் இந்திய அணி, உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியாவின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. இங்கிலாந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

X

Maalai Malar
www.maalaimalar.com