

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத் தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தின் பல் வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்து (குரூப் 1) அணிகள் சந்திக்கின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 64 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. டி20 உலகக் கோப்பையில் அறிமுக அணியாக களம் கண்டுள்ள பபிட்டி டி லீட் தலைமையிலான நெதர்லாந்து முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் பணிந்தது. இவ்விரு அணிகளும் டி20 சர்வதேச போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்டத்தில் வலுவான இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக லண்டன் லீட்சில் மாலை 3 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் 65 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்துக்கு எதிராக இதுவரை ஆடிய 5 இருபது ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
பர்மிங்காமில் இரவு 11 மணிக்கு நடைபெறும் இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தன.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முன்னதாக சவுத்தம்டனில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் (குருப்2) இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 151 ரன் இலக்கை இலங்கை அணி 19.4 ஓவர் களில் விரட்டிப்பிடித்தது. நிலக்ஷிகா சில்வா 54 ரன்களும் (37 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), காவ்ஷினி நுத்யங்கனா 24 ரன்னும் விளாசினர்.
டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி நியூசிலாந்தை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராக 7 ஆட்டங்களில் தோற்றிருந்தது.