

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகள் ஏற்கனவே நடந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி டௌன்டனில் நடந்தது.
முதல் இரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இதனால், மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் சூழலில் இரு அணிகளும் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் கேபடன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிகபட்சமாக 56 ரன்களை விளாசினார். இவர் தவிர யாஷிகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா தலா 32 ரன்களை விளாசினர்.
181 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அந்த அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அலைஸ் கேப்சி மற்றும் ஹீத்தர் நைட் அபாரமாக ஆடி அசுர வேக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடி முறையே 82 மற்றும் 70 ரன்களை விளாசிய நிலையில் இங்கிலாந்து மகளிர் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.