

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் இந்திய நேரப்படி நேற்றிரவு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டஜேநரைன் சந்தர்பால், பிராண்டன் கிங் ஆகியோர் தொடக்க வீரர்ளாக களம் இறங்கினர். டஜேநரைன் சந்தர்பால் 15 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கவேம் ஹோட்ஜ் களம் இறங்கினார். இவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் வந்த அமீர் ஜாங்கூ 26 ரன்களிலும், ஷாய் ஹோப் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் உடன் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 92 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்திருக்கும்போது, முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மோசமான வானிலை காரணமாக ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது என நடுவர்கள் தெரிவித்ததால் 90 ஓவர்களில் நிறைவடைய வேண்டிய முதல்நாள் ஆட்டம் 74 ஓவர்களில் நிறைவடைந்தது.
ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவர் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார்.
உபைத் ஷா 9 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், அலி உஸ்மான் 25 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சஜித் கான் 22 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.