

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. விமல்குமார் 63 ரன்களும், அனுராக் 35 ரன்களும் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ்குமார் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய அதிஷ் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 46 ரன்களையும், முகிலேஷ் 43 ரன்களையும் குவித்தனர்.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.