

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வென்றது. மழை காரணமாக 2 போட்டிகள் ரத்தானது. இதனால் இலங்கை அணி 1-0 என தொடரை வென்றது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 19 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.
கமில் மிஷாரா அரை சதம் கடந்து 40 பந்தில் 61 ரன்னும், டாசன் ஷனகா 24 பந்தில் 58 ரன்னும் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டும், மேத்யூ போர்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப், பிராண்டன் கிங் விரைவில் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு ஹெட்மயர், பவெல் ஜொடி அதிரடி காட்டியது. இந்த ஜோடி 46 பந்தில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹெட்மயர் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாவெலும் 43 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா தலா 3 விக்கெட்டும், வெல்லாலகே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.