சென்னை சேப்பாக்கத்தில் சதம்: புதிய சாதனை படைத்த அஸ்வின்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 339 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 102 ரன்களிலும் ஜடேஜா 86 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் சதம்: புதிய சாதனை படைத்த அஸ்வின்
Published on

சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வினுக்கு சென்னை மைதானத்தில் இது 2-வது சதமாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு 106 ரன்கள் எடுத்திருந்தார். இதையும் சேர்த்து இங்கு தனது 5-வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.

இதன் மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சதத்துடன், பலமுறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்த 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கேர்பீல்டு சோபர்ஸ் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (சென்னை மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ன்ஸ் (ஆக்லாந்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இங்கிலாந்தின் இயான் போத்தம் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம், 3 முறை 5 விக்கெட்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் பின்னர் அளித்த பேட்டியில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது.

இன்றைய டெஸ்டுக்குரிய ஆடுகளம், பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று உள்ளது. கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பந்து வீச்சாளர்கள் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் போது அடித்து ஆடலாம். ஒரு கட்டத்தில் வியர்த்து கொட்டி களைத்து போன போது அதை கவனித்த ஜடேஜா அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். இனி 2 ரன்களை 3 ரன்களாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவரது யோசனை மீண்டு வர உதவிகரமாக இருந்தது' என்றார்.

மேலும் அவர், 'புதிய பந்து ஓரளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளைய தினம் (இன்று) புத்துணர்ச்சியோடு போட்டியை தொடங்குவோம். ஆடுகளத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. அது சீக்கிரம் காய்ந்து விடும் என்று நம்புகிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com