

மதுரை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சதுர்வேத், இதுதான் எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த போட்டி என்றார்.
பத்தாவது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதுவரை நடந்துள்ள 8 ஆட்டங்களின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.
கோவை கிங்ஸ், திருச்சி சோழாஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகியவை 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர்), பாலசுப்பிரமணியம் சச்சின் 43 பந்தில் 84 ரன்னும் (9 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.
அடுத்து ஆடிய மதுரை பாந்தர்ஸ் 240 ரன் இலக்கை 3 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் எடுத்தது. அந்த அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் வரலாற்றில் 240 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெறுவது சாதனையாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டு நெல்லை அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் 209 ரன் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. மதுரை அணியின் வெற்றிக்கு சதுர்வேத் முக்கிய பங்கு வகித்தார். அவர் சதம் அடித்தார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய சதுர்வேத் 47 பந்தில் 121 ரன் (15 பவுண் டரி, 7 சிக்சர்) எடுத்தார். ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சதுர்வேத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சந்தேகம் இல்லாமல் இதுதான் எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த போட்டி.
நான் அடித்த ஒவ்வொரு பந்தும் பேட்டின் மையப்பகுதியில் மிகச் சரியாகப் பட்டது.
ஆட்ட நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
அவர் இன்று இருந்திருந்தால், இந்தத் தருணத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டு இருப்பார் என தெரிவித்தார்.