

வங்கதேசம் டெஸ்ட் அணியில் விளையாடி வருபவர் நயீம் ஹசன். இவர் 14 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 26 வயதே ஆகிறது. இவர் வெள்ளிக்கிழமை இரவு டாக்கா விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு ஆட்டோ ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் ஆட்டோ ரிக்ஷாவை வழிமறித்து நயீம் ஹசனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தன்னை சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற போதிலும், போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை தாக்கியபோது 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த செய்தி அறிந்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வாங்கி தரப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.