வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: காயத்தால் விலகிய ஷான் மசூத்

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
shan masood
Published on

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 98.5 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 92 ரன்னும், காவெம் ஹோட்ஜ் 84 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் முகமது அலி 4 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஷான் மசூத் சதம்

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 80.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 63 ரன்னில் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

29 ரன் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 40.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்சுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், டிரினிடாட் டெஸ்ட் போட்டியில் கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பேட்ஸ்மேன் ஷான் மசூத் இரண்டாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஷான் மசூத் விலகல்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீசிய வேகமான பந்து தாக்கியதில் மசூதிற்கு காயம் ஏற்பட்டது.

ஷான் மசூத் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 9-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 8-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com