

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.
முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 18 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் 10 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 66 ரன்கள் எடுத்த நிலையில் லோகேஷ்வர் 38 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய பாலசுப்ரமணியன் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடிய அவர் 43 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்களைக் குவித்தது. ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டும், சரவணன், பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.