

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 92 ரன்னும், காவெம் ஹோட்ஜ் 84 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் முகமது அலி 4 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 80.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 63 ரன்னில் அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 244/3 என வலுவான நிலையில் இருந்தது. ஷான் மசூத் சதம் அடித்து, அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பந்துவீச வந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். 11 ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த 5 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு பந்துவீச்சாளர் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 2016-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 4 'விக்கெட்-மெய்டன்' ஓவர்களை வீசி உலக சாதனை படைத்திருந்த இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் சாதனையை ஜஸ்டின் கிரீவ்ஸ் முறியடித்துள்ளார்.