வில்லிவாக்கம் தொகுதி கண்ணோட்டம்

தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், த.மா.கா. என முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதியாக வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி உள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி
வில்லிவாக்கம் தொகுதி
Published on

1977-ம் ஆண்டு முதல் இது வரை 10 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள வில்லிவாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 992 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 899 பேரும் இருக்கிறார்கள்.

பெண் வாக்காளர்களே அதிகம் உள்ள இந்த தொகுதியில் திருமங்கலம் மேல்நிலை தண்ணீர் தொட்டி பகுதி, வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு பகுதி, ஐ.சி.எப்., அயனாவரம், ஓட்டேரியில் ஒரு பகுதி, கெல்லீஸ் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

திருமங்கலம் மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தொடங்கி அண்ணாநகர் வரையில் வில்லிவாக்கம் தொகுதி பரந்து விரிந்துள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட முக்கிய தொழிற்சாலையாக ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள பல ரெயில்கள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ரெயில் பெட்டி தொழிற் சாலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகிறார்கள். இதனால் ரெயில்வே தொழிற்சங்கங்கள் நிறைந்த பகுதியாகவும் வில்லிவாக்கம் தொகுதி விளங்குகிறது.

இ.எஸ்.ஐ. தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது வில்லிவாக்கம் தொகுதியின் சிறப்பம்சமாக விளங்குகிறது. அதன் அருகில் மனநல மருத்துவமனையும் உள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தொகுதியில் வன்னியர், நாயுடு, முதலியார் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவு வசிக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்து பல தொழில்களில் ஈடுபட்டு வரும் நாடார் சமூகத்தினரும் இந்த தொகுதியில் உள்ளனர்.

கோரிக்கைகள்

மழைக்காலங்களில் வில்லிவாக்கம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக அன்னை சத்யா நகரில் அம்பத்தூர் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் வந்து தேங்குவதால் அப்பகுதி மக்கள் மழை காலங்களில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இதையத்து மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இப்போதே கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியூ ஆவடி ரோட்டில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறவர்கள் பட்டா கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். இந்த பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையாகவே உள்ளது.

ஜி.கே.எம். காலனி பகுதியில் 2-வது ரெயில்வே கேட் அமைந்துள்ள இடத்தில் போக்குவரத்து பிரச்சினையும் தீராத பிரச்சினையாக உள்ளது. அங்கு சுரங்கப்பாதை, மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு வரை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொகுதியாக வில்லிவாக்கம் தொகுதி விளங்கியது. அதன் பின்னர் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து கொளத்தூர், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன. ஒன்றுபட்ட பெரிய தொகுதியாக இருந்தபோது இந்த தொகுதியில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 112 வாக்காளர்கள் இருந்துள்ளனர். 4 தொகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பிறகு தற்போது தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சம் அளவுக்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்தான் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்தது. ரங்கநாதன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் இதுவரை தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக சார்பில் அ. வெற்றிஅழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2011-ல் வெற்றி பெற்ற ஜே.சிடி. பிரபாகரை அதிமுக நிறுத்தியுள்ளது.

1977- கே.சுப்பு (தி.மு.க.)

1980 -ஜே.டி.சி.பிரபாகரன் (அ.தி.மு.க.)

1984- வி.பி.சித்தன் (இந்திய பொதுவுடமை கட்சி, மார்க்சிஸ்டு)

1989- டபிள்யு.ஆர்.வரதராஜன் (இந்திய பொதுவுடமை கட்சி, மார்க்சிஸ்டு)

1991- காளன் (காங்கிரஸ்)

1996- ஜே.எம். ஆரூண் (த.மா.கா.)

2001- நெப்போலியன் (தி.மு.க.)

2006- ரங்கநாதன் (தி.மு.க.)

2011- ஜே.சி.டி. பிரபாகரன் (அ.தி.மு.க.)

2016 ரங்கநாதன் (தி.மு.க.)

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com