

தமிழகத்தின் தென் எல்லையில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள தொகுதி விளவங்கோடு. இதனால் இங்கு தேசிய கட்சிகளின் ஆதிக்கமே அதிகம். இத்தொகுதிக்குள் புகழ்பெற்ற சிதறால் மலை கோவில் உள்ளது. திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், நட்டா லம் சங்கர நாராயணர் கோவிலும் இங்குள்ளது. சிவாலயங்கள் அதிகம் உள்ள இத்தொகுதிக்குள் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களும், புகழ் பெற்ற முஸ்லிம் வழிபாட்டு தலங்களும் உள்ளன.
விளவங்கோடு தொகு தியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 495 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 339 பேர் ஆண்கள். 1 லட்சத்து 26 ஆயிரத்து 129 பேர் பெண்கள். 3&ம் பாலினத்தவர் 27 பேர் உள்ளனர்.
மாவட்டத்தின் 2-வது பிரதான வர்த்தக நகரமான மார்த்தாண்டம் இத்தொகுதிக்குள் உள்ளது. இதுபோல குழித்துறை, களியக்காவிளை போன்ற பெருநகரங்களும் இங்குதான் உள்ளன.
மேலும் மலைகிராமமான கோதையாறு பகுதியும் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி நிலையமும் உள்ளது.
தொகுதிக்குள் குழித்துறை நகராட்சி, உண்ணா மலைக்கடை, கடையல், அருமனை, பளுகல், பாகோடு, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும், கீழமலை, மாங்கோடு, வெள்ளாம்கோடு, இடைக்கோடு, குன்னத்தூர் போன்ற கிராம பகுதிகளும் உள்ளன.
இங்கு நாடார் சமூகத்தினர் சுமார் 47 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களை தவிர நாயர், வெள்ளாளர், பணிக்கர், செட்டியார் மற்றும் ஆதிவாசி மக்களும் வசிக்கிறார்கள். இதுபோல முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கணிசமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தான் தொகுதிக்குள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.
நாடு விடுதலை அடைந்த பிறகு விளவங்கோடு தொகுதிக்கு 1952-ல் தேர்தல் நடந்தது. இதுவரை 16 தேர்தல்களை சந்தித்து உள்ளது. அதில் 11 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 5 முறை கம்யூனிஸ்டு கட்சியினர் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
விளவங்கோடு தொகுதி ரப்பர் தோட்டங்கள் மிகுந்த பகுதியாகும். ஏராளமான வயல் வெளிகளும் உள்ளன. மலை கிராமங்களில் நறுமண பொருள்களும் விவசாயம் செய்யப்படுகிறது.
ரப்பர் தோட்டங்களுக்கு அடுத்தபடியாக இங்கு முந்திரி தோட்டங்களும் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதிக்குள் ஏராளமான முந்திரி ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இத்தொகுதி மக்களில் பெரும்பாலானோர் ரப்பர் மற்றும் முந்திரி ஆலை தொழிலாளர்களாகவே உள்ளனர்.
கோரிக்கைகள்
இங்குள்ள ரப்பர் உலக தரம் வாய்ந்தவை என்பதால் இத்தொகுதிக்குள் ரப்பர் பூங்கா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதுபோல முந்திரி ஆலைகளை மேம் படுத்தி தொழிலாளர்கள் வாழ்வை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய காங்.எம்.எல்.ஏ. விஜயதரணி
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பல கிராமங்கள் காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. அரசின் தனியார் வனபாதுகாப்பு சட்டத்தால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுபோல சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைப்பதாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இவையே இத்தொகுதிக்குள் நிலவும் பிரதான பிரச்சினையாக உள்ளது.
விவசாயிகளை பொறுத்தவரை நெய்யாறு இடது கரை சானல் பிரச்சினையால் பாதிக்கபடுவதாக கூறுகிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதோடு தொகுதிகுட்பட்ட பல கிராமங்களில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும், பழுதான சாலைகளை சீரமைத்து வாகனங்கள் வந்து செல்ல வசதி செய்து தரவேண்டும், கால்வாய்களை தூர் வார வேண்டும், குளங்களில் கழிவுகள் கொட்டுவதை தடை செய்வதோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.
இத்தொகுதியில் காங்கிரஸ்- பா.ஜனதா நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. விஜயதரணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜனதா சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1952- அலெக்சாண்டர் மனுவேல் சைமன் (காங்கிரஸ்)
1954- வில்லியம் (காங்கிரஸ்)
1957- வில்லியம் (காங்கிரஸ்)
1962- வில்லியம் (காங்கிரஸ்)
1967- பொன்னப்பன் நாடார் (காங்கிரஸ்)
197-1 பொன்னப்பன் நாடார் (காங்கிரஸ்)
1977 ஞானசிகாமணி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
1980- டி.மணி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
1984- சுந்தரதாஸ் (காங்கிரஸ்)
1989- சுந்தரதாஸ் (காங்கிரஸ்)
1991- சுந்தரதாஸ் (காங்கிரஸ்)
1996- டி. மணி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
2001- டி.மணி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
2006- ஜாண் ஜோசப் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
2011- விஜயதரணி (காங்கிரஸ்)
2016- விஜயதரணி (காங்கிரஸ்)