ஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக சதம் அடித்து ஷேன் வாட்சன் சாதனை

ஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக சதம் அடித்து ஷேன் வாட்சன் சாதனை

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது முறையாக சதம் அடித்து சென்னை அணியின் ஷேன் வாட்சன் சாதனை படைத்துள்ளார். #VivoIPL #ShaneWatson #CSK
Published on

புனே:

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். 

106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் மூன்று முறை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கொண்டிருந்த போது இரண்டு சதங்கள் அடித்திருந்தார். 

தற்போது அந்த அணிக்கு எதிராக விளையாடி தனது மூன்றாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் நான்காவது சதமாகும். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் சதம் அடித்தார். இது கெயில் அடித்த 21-வது டி20 சதமாகும். கெயில், வாட்சன் இருவரும் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. #VivoIPL #ShaneWatson #CSK

X

Maalai Malar
www.maalaimalar.com