

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2 முறை வெற்றி பெற்ற தொகுதி ஆர்.கே.நகர் தொகுதி ஆகும். மற்ற தொகுதிகளை போல் சாதாரணமாக இருந்த இந்த தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டதால் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றது. 2015-ம் ஆண்டு முதல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே தனது எம்.எல்.ஏ. பதவியை அப்போது ராஜினாமா செய்தார்.
2015 ஜூன் மாதம் 27-ந்தேதி ஆர்.கே.நகர். தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தி.மு.க. தேர்தலை புறக்கணித்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன் ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் நின்றார். அந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
அப்போது கிடைத்த ஓட்டு விவரம்: ஜெயலலிதா (அ.தி.மு.க.)- 1,60432, சி.மகேந்திரன் (இ.கம்யூ)- 9,710. இதன் பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் ஜெயலலிதா போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் சிம்லா முத்துசோழன் எதிர்த்து நின்றார்.
இந்த தேர்தலில் ஜெயலலிதா 39,545 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்கு விவரம்:-
ஜெயலலிதா (அ.தி.மு.க.)- 97,218, சிம்லா முத்து சோழன் (தி.மு.க.)- 57,673. இந்த தேர்தலில் தி.மு.க.வை தவிர மற்ற 43 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சரான ஜெயலலிதா 4 மாதங்களில் உடல் நலக்குறைவால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி சிகிச்சை பலன் இன்றி ஆஸ்பத்திரியிலேயே மரணம் அடைந்தார்.
இதனால் ஆர்.கே.நகர். தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்தது. 2017-ம் ஆண்டு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்த போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
அந்த தேர்தலில் டி.டி. வி.தினகரன் தொப்பி சின்னத்தில் ஒரு அணியாகவும், ஓ.பி.எஸ்., மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும் போட்டியிட்டது.
இடைத்தேர்தல் நின்றதால் அதன்பிறகு மீண்டும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட டி.டி.வி. தினகரன் 40,707 ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. டெபாசிட்டை தக்கவைத்தது. தி.மு.க. டெபாசிட்டை இழந்தது.
இடைத்தேர்தல் ஓட்டு விவரம்:-
டி.டி.வி.தினகரன் (சுயே)- 89,013, இ.மதுசூதனன் (அ.தி. மு.க.)- 48,306, மருதுகணேஷ் (தி.மு.க.)- 24,581.
ஆர்.கே.நகர். தொகுதியில்தான் காசிமேடு பகுதி உள்ளது. எண்ணை சேமிப்பு கிடங்கான தண்டையார் பேட்டை, கொருக்குபேட்டை பகுதியும், நெரிசல் மிகுந்த புது வண்ணாரப்பேட்டை, நேதாஜிநகர், எழில்நகர், வ.உ.சி.நகர், சுனாமி குடியிருப்பு பகுதியும் உள்ளது.
இந்த தொகுதியில் பல தெருக்கள் கார் போக முடியாத அளவுக்கு சந்து பகுதிகள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். ஆங்காங்கே குப்பைகள், சாக்கடைகள் நிறைந்த பகுதிகளாக காட்சி அளித்தன. மிகப்பெரிய கொடுங்கையூர் குப்பை கிடங்கும் இங்குதான் உள்ளது.
ஜெயலலிதா தேர்தலில் நின்றபிறகு இந்த தொகுதி தலைகீழாக மாறி பளிச்சென்று காணத்தொடங்கியது. ரோடுகள் புத்தம் புதிதாக மாறின.
ஜெயலலிதாவின் முயற்சியால் மெட்ரோ ரெயில் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை கொண்டு வரப்பட்டது. காரணம் ஆர்.கே.நகர் இந்த தொகுதியில் வருவதால் வண்ணாரப்பேட்டையுடன் முடிந்த மெட்ரோ ரெயிலை விம்கோநகர் வரை நீட்டிக்கும் அவரது உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்பட்டது.
இந்த பணி கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சென்னைக்கு வந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயிலை தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதாவின் மனதில் உருவான பல்வேறு திட்டப் பணிகளும் இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பூங்காக்கள், சமுதாய நலக்கூடங்கள், வெள்ள நிவாரண முகாம்கள், ஸ்டேடியம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டன.
தற்போது ஆர்.கே. நகரில் அடுக்குமாடி வீடுகள் ஏராளம் வந்துவிட்டன. அந்த அளவுக்கு இந்த தொகுதி வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்த தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் 30 சதவீதம் வரையில் உள்ளனர். இதற்கு அடுத்த படியாக வன்னியர்கள் 25 சதவீதம், முஸ்லிம்கள் 15 சதவீதம், கிறிஸ்தவர்கள் 8 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 10 சதவீதம் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர்.
தெலுங்குமொழி பேசும் ஆதி ஆந்திரர்களும் இங்கு கணிசமாக வசிக்கிறார்கள். கொருக்கு பேட்டை, தண்டையார்பேட்டையில் எண்ணை சேமிப்பு கிடங்குக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து குழாய் வழியாக எண்ணை கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்டநாட்கள் ஆன தால் அவ்வப்போது குடிநீரில் கச்சா எண்ணையும், கழிவு நீரும் கலப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க புது குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக சார்பில் ராஜேஸ் என்பவரும், திமுக சார்பில் ஜே.ஜே. எபினேசர் போட்டியிடுகின்றனர்.
சொத்து விவரம்:-
1. ஜே.ஜே. எபினேசர்
கையிருப்பு ரூ. 50 ஆயிரம்
அசையும் சொத்து மதிப்பு: ரூ. 1,05,938
2. ராஜேஸ்
கையிருப்பு ரூ. 74,600
அசையும் சொத்து மதிப்பு: ரூ. 89,50,487
சொத்து மதிப்பு- ரூ. 1,34,33,000
வாக்காளர்கள் விவரம்:
மொத்தம்- 2,62,738
ஆண்கள்- 1,26,744
பெண்கள்- 1,35,889
3-ம் பாலினம்- 105
ஜெயலலிதா போட்டியிட்ட போது...
ஜெ. ஜெயலலிதா (அ.தி.மு.க.)- 97,218
சிம்லா முத்துசோழன் (தி.மு.க.)- 57,673
வசந்தி தேவி (விடுதலைசிறுத்தை)- 4,195
அக்னீஸ் (பா.ம.க.-) 3,011
எம்.என்.ராஜா (பா.ஜனதா)- 2,928
தேவி (நாம் தமிழர் கட்சி)- 2,513
எடின்பர்க் (பகுஜன் சமாஜ்கட்சி)- 327
சடையாண்டி (சோசலிஸ்ட் ஐக்கிய மையம்)- 132
மற்றும் 39 வேட்பாளர்கள்
இடைத்தேர்தல்
டி.டி.வி.தினகரன் (சுயேட்சை)&89,013
இ.மதுசூதனன் (அ.தி.மு.க.)&48,306
மருதுகணேஷ் (தி.மு.க.)&24,651
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)&3,860
கரு.நாகராஜன் (பா.ஜனதா)&1,417
நோட்டா&2,373
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-
1977- ஐசரி வேலன் (அ.தி.மு.க.)
1980- ராஜசேகரன் (காங்.)
1984- எஸ்.வேணு கோபால் (காங்.)
1989- எஸ்.பி.சற்குண பாண்டியன் (தி.மு.க.)
1991- இ.மதுசூதனன் (அ.தி.மு.க.)
1996- எஸ்.பி.சற்குண பாண்டியன் (தி.மு.க.)
2001- சேகர்பாபு (அ.தி.மு.க.)
2006- சேகர்பாபு (அ.தி.மு.க.)
2011- வெற்றிவேல் (அ.தி.மு.க.)
2015- ஜெ.ஜெயலலிதா (இடைத்தேர்தல்)
2016 - ஜெ. ஜெயலலிதா
2017 - டி.டி.வி.தினகரன் (சுயேட்சை)