

பெரம்பலூர் தமிழகத்தில் மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டம். 1995 ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டமாக உதயமானது. மறுசீரமைப்பின்கீழ் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என 2 சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையான ஒரே தொகுதி பெரம்பலூர் ஆகும். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் என 4 வட்டங்களை உள்ளடக்கியது. பெரம்பலூர் தனி தொகுதியில், தலித் மக்கள் தவிர்த்து பரவலான இதர சமூக மக்களும், இஸ்லாமிய மக்களும் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய விவசாயம் பிரதான தொழில் ஆகும். ஆலத்தூர் வட்டாரத்தில் சுமார் 25 கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது.
மக்காச்சோளம் 25 ஆயிரம் ஹெக்டேரிலும், 20 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தியும் விளைகின்றன. எறையூரில் 50 ஆண்டுகளாக செயல்படும் அரசு சர்க்கரை ஆலையிலும், உடும்பியத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையிலும் சேர்ந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் கரும்பு அரவை நடைபெறுகிறது.
தீகல் குவாரிகளால் அதிகளவில் கனிமம் வெட்டி எடுக்கப்படும் தொகுதியாகும். சிறிய மலைகள் அதிகமுள்ள பெரம்பலூர் தொகுதியில் கட்டுமானத்திற்கு பயன்படும் கற்கள், ஜல்லி, எம்.சான்ட் மணல் உள்ளிட்டவை தயாரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் ரஞ்சன் குடி கோட்டை வரலாற்று சிறப்பு எனலாம்.
வேப்பந்தட்டை வட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைச்சாரலும், நீர்வீழ்ச்சியும் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள மயி லூற்று அருவியும், கோரை யாறு அருவியும் மழைக்கால பொழுது போக்குமிடங்களாக இருக்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பு விசுவக்குடி அணை, எம்.ஆர்.எப். தனியார் தொழிற்சாலை ஆகும். மேலும் பாடாலூர் - இரூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆவின் பால் பண்ணை ஆகிய திட்டங்களும் உண்டு. 50 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதியாகவே மட்டுமே உள்ளது ரெயில் பாதை இல்லாத பெரம்பலூர் மாவட்டம்.
பெரம்பலூர் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பது மிகச்சிறப்பு. குடிநீர் தேவை பற்றாக் குறையாகவே உள்ளது. பெரம்பலூரில் தனியார் கல்வி நிலையங்கள் ஏராளம். கல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, கனிம சுரண்டல் என எதிர்காலத்திற்கான அச்சுறுத்தல்கள் அதிகமாகவே உள்ளது.
பெரம்பலூரில் தமிழகத்தை ஆளும் கட்சிக்கான பிரதிநிதிகளே மாறிமாறி தேர்வாகிறார்கள். அந்த வகையில் தற்போதைய எம்.எல்.ஏ.வான இளம்பை இரா.தமிழ்செல்வன் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி உள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க.வே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய பொதுவுடமைக்கட்சி 1 முறையும், சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
பெரம்பலூர் தனி தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:-
பெரம்பலூர் வட்டம், வேப்பந்தட்டை வட்டம், ஆலத்தூர் வட்டம் (பகுதி) சிறுவயல், நக்கசேலம், எலந் தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப் பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார் மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாட லூர் (கிழக்கு) ஆகிய கிராமங்கள்.
2021-ன்படி வாக்காளர்கள் விவரம்:-
ஆண் வாக்காளர்கள் 1,47,320 பேர், பெண் வாக்காளர்கள் 1,54,950 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 21 பேர் என மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர். மாற்று திறனாளிகள் 3,268 பேர், 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 5,348 பேர் இருக்கிறார்கள்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் 165 இடங்களில் 428 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் தொகுதியில் 89 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, நுண்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தேர்தல் நிகழ்வுகள் கண்காணிக்கப்படுகிறது.
மத்திய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசும், சட்டமன்ற உறுப்பினரும் வெற்றிபெற வேண்டும் என்பதே தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுவரை பெரம்பலூர் தொகுதி வெற்றி நிலவரம்:-
1951 பரமசிவம் (சுயேட்சை)
1957 பெரியண்ணன் (காங்கிரஸ்)
1962 அழகுமுத்து (தி.மு.க.)
1967 ராசு (தி.மு.க.)
1971 ராசு (தி.மு.க.)
1977 ராமசாமி (அ.தி.மு.க.)
1980 ராசு (தி.மு.க.)
1984 நல்லமுத்து (காங்கிரஸ்)
1989 பிச்சைமுத்து (இந்திய பொதுவுடமை)
1991 செழியன் (அ.தி.மு.க.)
1996 தேவராசன் (தி.மு.க.)
2001 ராஜரத்தினம் (அ.தி.மு.க.)
2006 ராஜ்குமார் (தி.மு.க.)
2011 தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)
2016 தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)