

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 லீக் தொடர் உலகின் பணக்கார தொடராக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வீரர்களும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஐபிஎல் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் டி20 லீக் மற்றும் கவுண்டி தொடர் நடைபெறும். இதனால் பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிடையாது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவர்களை அனுமதிப்பது கிடையாது.
ஆனால் இந்த வருடத்தில் பல்வேறு வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ஏலம் போகாத வீரர்கள், தற்போது காயத்தால் வெளியேறும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
யார்க்சையர் அணியில் விளையாடிய டேவிட் வில்லே, லியாம் பிளங்கெட், சுர்ரே அணியில் விளையாடிய டாம் குர்ரான் ஆகியோர் ஐபிஎல் விளையாடுவதற்கு வந்து விட்டனர். இது அந்த கவுண்டி அணிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே சென்றால் கவுண்டி போட்டி கேள்விக்குறியாகிவிடும் என்று நினைத்த கவுண்டி அணி உரிமையாளர்கள் கடந்த வாரம் ஒன்று கூடி விவாதித்தனர். சுர்ரே அணியின் டைரக்டரும், முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டனும் ஆன அலெக்ஸ் ஸ்டீவர்ட் ஐபிஎல் தொடருக்கு விளையாடச் செல்லும் வீரர்களுக்கான கட்ஆஃப் தேதி தேவை என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அலெக்ஸ் ஸ்டீவர்ட் கூறுகையில் ‘‘டாம் குர்ரான் ஐபிஎல் சென்ற பின்னர்தான் தாமதமாக இது குறித்து விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து விவாதிக்க வேண்டிய நேரம் என்று நம்புகிறேன். ஐபிஎல் எங்கேயும் போகப்போவதில்லை.
ஐபிஎல் சரியான போட்டித் தொடர் என்பதாலும், அதிக அளவில் பணம் கிடைப்பதாலும் வீரர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டாம் குர்ரானுக்காகவும், பிளங்கெட், டேவிட் வில்லே ஆகியோருக்கான அழைப்பு வந்தபோதுதான் பிரச்சினை உருவானது.
சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு ஒரு காலத்திற்கு முன்பு கட்ஆஃப் தேதி தேவையானது. ஒரு வீரர் ஐபிஎல் ஏலத்தின்போது ஏலம் எடுக்கப்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
அதேவேளையில் ஐபிஎல் ஏலத்தில் ஏலம்போகாத வீரர்கள் மூன்று அல்லது நான்கு வாரங்கள் இருக்கும்போது, மாற்று வீரர்களாக எடுக்கக்கூடாது. அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட வேண்டும்’’ என்றார்.