

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஹராரேயில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்னே எடுக்க முடிந்தது. அடுத்து ஆடிய இந்தியா 13.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 50 ரன்னும், இஷான் கிஷன் 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர் 35 ரன்னும் எடுத்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
அயர்லாந்து, இங்கிலாந்திடம் 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த இந்தியா இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
இந்திய அணி ஜிம்பாப்வேயுடன் 2010-ம் ஆண்டு முதல் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதுவரை முடிந்த 4 தொடரில் 3 தொடரை இந்தியா கைப்பற்றியது. ஒரு தொடர் சமனில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன்செய்யும் ஆர்வத்தில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இருக்கிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது டி20 போட்டியாகும். இதுவரை நடந்த 15 ஆட்டங்களில் இந்தியா 12-ல், ஜிம்பாப்வே 3-லும் வெற்றி பெற்றுள்ளன.