

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை, இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 60 ரன்னில் வெளியேறினார். பிரியான்ஷ் ஆர்யா 32 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 24 ரன்னிலு ஆட்டமிழந்தனர். சூர்யான்ஷ் ஷெட்கே 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் முகமது ஷிராஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. அணியின் எண்ணிக்கை 93 ஆக இருக்கும்போது அவிஷ்கா பெர்னாண்டோ 45 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 47 ரன்னில் வெளியேறினார்.
அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமர விக்ரமா 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய சஹான் அராச்சிகே அரை சதம் கடந்து 73 ரன்னில் அவுட்டானார்.
கடைசி 3 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. தூணாக நின்ற அராச்சிகேவை அன்ஷுல் கம்போஜ் வீழ்த்தினார். இதனால் 48வது ஓவரில் 7 ரன் எடுக்கப்பட்டது.
12 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரை அர்ஷத் கான் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2வது பந்தில் வியாஸ்காந்த அவுட்டானார். 3வது பந்தில் அதிரடியாக ஆடிய வனுஜா சஹான் ரன் அவுட்டானார். 4வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 5வது பந்தில் முகமது சிராஸ் அவுட்டானார்.
இறுதியில், இலங்கை அணி 48.5 ஓவரில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெய்க்வாடிற்கு வழங்கப்பட்டது.