இந்த அணியில் தோல்வி குறித்த பயத்திற்கு இடமில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்

நாம் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடி, ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்படுகிறோமோ, அது அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையும்.
Shreyas Iyer
ஷ்ரேயாஸ் அய்யர்
Published on

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டதும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண்டு தொடர்களும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மோசமானதாகவே அமைந்தது. அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 0-4 என இழந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் நாளை தொடங்குகிறது.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் தோல்வி, ஜிம்பாப்வே தொடர் குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

இங்கிலாந்தில் நாங்கள் ஒரு கடினமான காலகட்டத்தைச் சந்தித்தோம். ஆனால், அதிலிருந்து பல சாதகமான விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். ஒரு அணியாக இனிவரும் காலங்களில் எதை உருவாக்க வேண்டும் என்பதையும், களத்தில் இறங்கிய பிறகு எத்தகைய மனத்தெளிவு, விழிப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறிச் செயல்படும் திறன் ஆகியவை தேவை என்பதையும் நாங்கள் புரிந்துகொண்டோம்.

எங்களில் சிலர் இங்கு (ஜிம்பாப்வே) அமுதல் முறையாக விளையாடுகிறோம். எனவே, எவ்வளவு விரைவாக நாம் சூழலுக்கு ஏற்ப மாறுகிறோமோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவோம்.

இந்திய வீரர்கள் தோல்விக்கு அஞ்சக்கூடாது

இந்திய வீரர்கள் தோல்விக்கு அஞ்சக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், உங்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் இருக்கும்போது, ​​நீங்கள் உங்களைக் தற்காத்துக் கொள்ளவே விளையாடுவீர்கள். அந்தப் பயம் இல்லாதபோது, ​​உங்களால் உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

வெளியே மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடி, ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்படுகிறோமோ, அது அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையும்.

இது நிச்சயமாக மிகவும் சவாலானது. நாங்கள் நேற்றுதான் ஜிம்பாப்வேவுக்கு வந்தோம். இன்று பயிற்சி, நாளை போட்டி. ஆனால் இது சுவாரஸ்யமானது. இத்தகைய சூழல்களில் சிறப்பாகச் செயல்படும்போது, ​​நீங்கள் நிச்சயமாக மனநிறைவு அடைவீர்கள்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் ஒரு அணியாக நாங்கள் எப்படி விளையாடப் போகிறோம் என்பது குறித்து நிறைய விவாதித்து வருகிறோம்.

இது ஒரு சிறந்த அனுபவம், ஏனென்றால் இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை. இது ஒரு சவாலான காலகட்டம், இதை எவ்வளவு விரைவாகக் கடந்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு ஒரு அணியாக நீங்கள் மேம்படுவீர்கள்.

இவ்வாறு ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com