

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நியூ சண்டிகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய 2-வது நாளில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
கே.எல். ராகுல் (100), சுப்மன் கில் (126) சதம் விளாசினர். சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81), வாஷிங்டன் சுந்தர் (52 நாட்அவுட்) ஆகியோர் அரைசதம் விளாசினர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது சலீம் 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹ்மத் ஷா 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அப்துல் மாலிக் (16), செதிக்குல்லா அடல் (17), ரஹ்மதுல்லா குர்பாஸ் (12), ஹஸ்மதுல்லா ஷாஹிதி (20), அப்சர் ஜஜாய் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் மனவ் சுதர் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.