

இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் டிராபி. இது வடக்கு, தேற்கு, மேற்கு, வடகிழக்கு, மத்தி, கிழக்கு ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 23-ந்தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் வடக்கு மண்டலம் (North Zone) அணியின் கேப்டனாக ஜம்மு-காஷ்மீர் மாநில விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கணையா வதாவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் இந்திய அணிக்காக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆயுஷ் படோனி விளையாட உள்ளனர்.
2025-26 ரஞ்சி டிராபியை ஜம்மு-காஷ்மீர் அணி வென்றது. அப்போது, இந்தியா முழுவதும் இந்த கணையா வதாவன் தெரியவந்தார்.
ஜம்முவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர் கணையா வதாவன். 17 வயதில் 2018-19 ரஞ்சி டிராபி சீசனில் அசாம் அணிக்கு எதிராக முதன்முதலில் முதல்தர கிரிக்கெட்டில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடினார்.
ஆனால், ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக விளையாடிய அடுத்தப் போட்டியில் இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதன்பின் 2019-20, 2021-22, 2022-23, 2023-24, 2024-25 ரஞ்சி டிராபிக்கான ஜம்மு-காஷ்மீர் அணியில் இடம் கிடைக்கவில்லை.
கடந்த வரும் துலீப் டிராபிக்கான வடக்கு மண்டலம் அணியில் இடம் பிடித்தார். அப்போது இரண்டு போட்டிகளில் 99 ரன்கள் அடித்தார். இதில் ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். இதனால் 2025-26 ரஞ்சி டிராபிக்கான ஜம்மு-காஷ்மீர் அணியில் இடம் பிடித்தார்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 போட்டிகளில் 474 ரன்கள் விளாசினார். சராசரி 36.46 ஆகும். ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்தார். கர்நாடகா அணிக்கெதிராக இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார். இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சதம் அடித்தார்.
ஜம்மு-காஷ்மீர் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார். தற்போது வரை 16 முதல்தர போட்டிகளில் 883 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கும்.
கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் டி20 அணியில் அறிமுகம் ஆனார். 4 போட்டிகளில் 77 ரன்கள் சேர்த்தார்.
ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிதன் மூலம் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.