

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா விரைவில் முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
மார்னஸ் லபுசேன், சேவியர் பார்லட்பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். பார்லட் 52 ரன்னும், ஜோஷ் இங்கிலீஸ் 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேசம் வெற்றி பெற 41 ஓவரில் 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சவுமியா சர்க்கார் 42 ரன்னும், ஷாண்டோ 41 ரன்னும் எடுத்தனர். லிட்டன் தாஸ் 21 ரன்னும், மொசாடெக் ஹொசைன் 15 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வங்கதேச அணி 35 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. தவ்ஹித் ஹிருடோய் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்ட நாயகன் விருது முஸ்தபிசுர் ரகுமானுக்கு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முதல் முறையாக வங்கதேசம் கைப்பற்றி அசத்தியுள்ளது.