முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்

முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 284 ரன்களைக் குவித்தது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்
Published on

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 284 ரன்களைக் குவித்தது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 67 ரன்னும், தன்ஜித் ஹசன் தமிம் 54 ரன்னும் எடுத்தனர். தவ்ஹித் ஹிருடோய் 31 ரன்னில் அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய மொசாடெக் ஹொசைன் 70 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், லியாம் ஸ்காட், மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் முதல் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லபுசேன் ஒரு ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 47 ரன்னிலும், கூப்பர் கானலி 35 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேமரூன் கிரீன் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 42.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

இதனால் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் வங்கதேச அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது மொசாடெக் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com