2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.
rashid khan
Published on

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

47 ஓவராக குறைப்பு

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டு, 47 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது.தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் அரை சதம் கடந்து 84 ரன்னில் அவுட்டானார். செடிகுல்லா அடல் 45 ரன்னும், ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்னும், ஒமர்சாய் 33 ரன்னும், குர்பாஸ் 32 ரன்னும் எடுத்தனர்.

இப்ராகிம் ஜட்ரன் பொறுப்பான ஆட்டம்

2வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜட்ரன்-செடிகுல்லா அடல் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து சார்பில் மார்க் அடைர், ஜெய் மூந்த்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. கேட் கார்மிசெல் அரை சதம் கடந்து 62 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ பால்பிரின் 36 ரன்கள் சேர்த்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், அயர்லாந்து அணி 33.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ரஷித் கான் 6 விக்கெட்

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com