

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 49 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 22 பந்தில் 44 ரன்கள் விளாசினார். சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 69 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா தலா 66 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சூர்யான்ஷ் ஷெட்கே 27 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அப்துல்லா அகமத்சாய் 5 விக்கெட்டும், பர்மனுல்லா சபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மழை மீண்டும் பெய்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 38 ஓவரில் 294 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் மிர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருக்கு பஹீர் ஷா ஒத்துழைப்பு அளித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் ஏ அணி டெக்வொர்த் லீவிஸ் முறைப்படி 4 ரன்னில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது இம்ரான் மிர்ருக்கு அளிக்கப்பட்டது. இந்தியா அதிக ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.