உலக பேட்மிண்டன் போட்டி: அரை இறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கலப்பதக்கம் பெற்றார்

உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பேட்மிண்டன் போட்டி: அரை இறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கலப்பதக்கம் பெற்றார்
Published on

ஹோபன்ஹேகன்:

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.

1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அவர் முந்தைய நாளில் நடந்த கால் இறுதியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னுக்கு(டென்மார்க்) அதிர்ச்சி அளித்து இருந்தார். உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 23-21, 21-13 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் அன் சே யங் (தென்கொரியா) 21-19, 21-15 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரரான சென் யு பெய்யை (சீனா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com