விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா

விளையாட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி சக்திகரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்தபடம்.
விழாவையொட்டி சக்திகரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்தபடம்.
Published on

கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் பழமை வாய்ந்த விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருக்கல்யாண விழா மற்றும் திருப்பணிகள் தொடக்க விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கம்பம் வெட்டுதல், புற்றுக்கண்ணில் இருந்து சிறப்பு பூஜையுடன் கம்பம் பவனி வருதல், சக்தி கரகம் பவனி வருதல், பூவோடு எடுத்தல், அம்மன் அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையில் செண்டை மேளம், மங்கள வாத்தியங்கள் முழங்க சக்திகரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பக்தர்கள் சக்திகரகம் எடுத்தும், பெண்கள் அக்னிசட்டி ஏந்தியும் ஊர்வலமாக சரவணம்பட்டி, ஆஸ்பத்திரி வீதி, மாரியம்மன் கோவில் வீதி, பெரியார் நகர், சிவன் கோவில் வீதியை கடந்து சத்தி ரோடு வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலில் அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை, அன்னதானம், மாலை 4 மணிக்கு அலகு குத்தி தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com