வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய தேர்பவனி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்ககேற்பு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் மாதாவின் தேர் பவனி வந்த காட்சி.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன் திரளான பக்தர்கள் வெள்ளத்தில் மாதாவின் தேர் பவனி வந்த காட்சி.
Published on

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய “பசிலிக்கா“ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.

துன்பத்தில் துவண்டு, அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி இந்த விழா நடைபெறுவதாக ஐதீகம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி, விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com