

சென்னை வடபழனி முருகன் கோவில் 1890-ம் ஆண்டு ஓலை கொட்டகையுடன் நிர்மாணிக்கப்பட்டது. இக்கோவில் 1920-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டது.
இந்த கோவிலில் மூலவர் பழனி முருகன் நின்ற கோலத்தில் காலில் பாதரட்சைகளுடன் அருள்பாலிக்கிறார். பல்வேறு பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பாலாயப் பிரதிஷ்டை வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், கணபதி ஹோமம், நடக்கிரஹ ஹோமம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பாலஸ்தாபன தினமான 12-ந்தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பின்னர் காலை 8 மணிக்கு மகா பூர்ணாஹீதியும், 8.30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டை நடக்கிறது. காலை 9.15 மணிக்கு திருப்பணிகள் தொடங்குகின்றன.
பாலாலய பிரதிஷ்டையை பக்தர்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.