உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்

திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வந்தது. தினமும் காலையில் விநாயகர் ஊர்வலம், இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் இந்திர விமானம், கஜ வாகனம், அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், வெற்றிவேல் சப்பரம், சட்டங்கால் சப்பரம் ஆகியவற்றில் ரதவீதிகளில் எழுந்தருளி, ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

கோவில் அருகே, திருவிழாவை முன்னிட்டு இரவு பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, தோல்பாவை கூத்து, சமய சொற்பொழிவு, மயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தேரில் சுவாமி சந்திரசேகர், மனோன்மணி அம்பாள் அருள் பாலித்த காட்சி.

விழாவில் சிகர நிகழ்ச்சியான 9-ம் திருநாளான நேற்று காலை கோவிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர்,மனோன்மணி அம்பாள் மேளதாளம் முழங்க தேருக்கு புறப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியவுடன் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தேர் முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர்.

பின்னர், விநாயகர் தேர் முன் செல்ல, சுவாமி, அம்பாள் இருந்த பெரிய தேரை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த போது, வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். ஆங்காங்கே தேரில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com