உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் உதய மார்த்தாண்ட பூஜை நடந்தது. தொடர்ந்து யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலம் கோவில் முன்பிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டது. ரதவீதிகளை வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 7.35 மணிக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கொடி மரத்தை சுற்றி தர்ப்பை புல்லால் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்கம் உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா அடுத்த மாதம் 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை விநாயகர் வீதி உலா நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் கஜ வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com