

திருச்சி மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது. அன்று இரவு அம்மன் கேடயத்தில் வீதி உலா வந்தார்.
2-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் பூத வாகனத்திலும், நேற்று இரவு அம்மன் கயிலாய வாகனத்திலும் வீதி உலா வந்தார். இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை இரவில் அம்மன் காமதேனு, சிம்மம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளுகிறார். காலை 10.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை அம்மனுக்கு விசேஷ சந்தன காப்பு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
15-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மன் முத்து பல்லக்கிலும், 16-ந்தேதி இரவு கேடயத்திலும் வீதி உலா வருகிறார். 16-ந்தேதி இரவு 8 மணிக்கு காப்பு அவிழ்த்தலுடன், விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராணி, உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.