

ராமநத்தத்தை அடுத்த தொழுதூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீமிதி திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், அர்ச்சுனன் வில் வளைத்தல், திருக்கல்யாணம், பூ எடுத்தல், மாடுபிடித்தல், சங்கரன் காளி கோட்டையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற பல வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மாலை உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடன் களை செலுத்தினர். இதையடுத்து, அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.