திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஏப்ரல் 1-ந்தேதி ஆழித்தேரோட்ட விழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட விழா வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஏப்ரல் 1-ந்தேதி ஆழித்தேரோட்ட விழா
Published on

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.

மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடத்திட கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com