திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கருட சேவை

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
திருவந்திபுரம் தேவநாதசாமி கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
திருவந்திபுரம் தேவநாதசாமி கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
Published on

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினசரி தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சூரிய பிரபை, யாளி, தங்க விமானம் என்று வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி சாமி வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து 5-வது நாளான நேற்று முன்தினம் காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, நாச்சியார் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

பின்னர் இரவில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் கருட வாகனத்தில் எழுந்தருளிய தேவநாதசாமி நேற்று காலை வரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் மஞ்சள் உற்சவமும், வசந்த உற்சவமும் நடைபெற்றது. இரவில் யானை வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வெண்ணை தாழி உற்சவமும், இரவில் தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) காலை பேட்டை உற்சவம் நடந்து இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com