திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது
Published on

சுசீல முனிவரின் குழந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற ராகுபகவான் நான்கு தலங்களுக்கு சென்று வழிபட்டு நிறைவாக திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கின்ற நாகநாதசுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார். சிவபெருமான், ராகுவே என் அருள் பெற்ற நீ என்னை வழிபட்டு பிறகு உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவைகளை நீக்கி அருள்பாலிக்க வேண்டும் என பணித்தார்.

அதுபோலவே ராகு பகவானும் மங்கள ராகுவாக தன்னை வணங்கும் அடியார்களுக்கு மேற்கூறிய தோஷங்களை நீக்கி நிருதி மூலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பாலானது நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற நாகநாதர் கோவிலில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12.48 மணிக்கு ராகுபகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ராகு பகவானுக்கு 21-ந் தேதி முதல் 24-ந்தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனையும், 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்குகிறது. 26-ந் தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடைபெறுகின்றன. 27-ந் தேதி காலை 10 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com