

திருச்சி அருகே உள்ள குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. ‘வயலூர் முருகன்’ என்றழைக்கப்படும் இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) அன்று நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும்.
மதியம் 12 மணிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். 1 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு உய்யகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அதவத்தூர் ஆற்றின்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடக்கிறது.
இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடலை இரவு 10 மணிக்கு சுவாமி சென்றடைகிறார். அங்கு மண்டகப்படி பெற்று கீழ வயலூரில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தடைகிறார். அங்கு மகாதீபாராதனை நடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமம் வந்தடைகிறார்.
மறுநாள் (9-ந் தேதி) காலை 8 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் சுவாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு காலை 9.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் சோமரசம்பேட்டை 4 வீதிகளில் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு சுவாமிகள் வந்தடைகின்றன. அங்கு அனைத்து சுவாமிகளும் தங்கி இரவு 7 மணிவரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இரவு 7.15 மணிக்கு பின், அனைத்து சுவாமிகளும் தங்களது கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
தைப்பூச திருவிழா நடைபெறும் 8-ந் தேதியன்று வயலூர் முருகன் கோவிலுக்கு திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் உத்தரவின்பேரில் தக்கார் ராணி, செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.