ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா கோவிலில் இருந்து இன்று புறப்படுகிறது

மண்டல பூஜையன்று ஐயப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று ஆரன்முளா கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை படத்தில் காணலாம்.
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை படத்தில் காணலாம்.
Published on

சபரிமலை :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதையொட்டி ஆண்டுதோறும், சுவாமி ஐயப்பனுக்கு தங்கத்திலான அங்கி அணிவித்து பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வாறு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் எடையிலான தங்க அங்கி, தற்போது பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 26-ந் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற இருப்பதால், இந்த தங்க அங்கி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்த ஊர்வலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தங்க அங்கி ஊர்வலத்திற்கு வழக்கமாக, வழி நெடுக அளிக்கப்படும் பக்தர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் போலீசார் உள்பட அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சபரிமலை செல்லும் வழியில் ஒமல்லூர், கோன்னி, பெரிநாடு ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் தங்க அங்கி வைக்கப்படும். அங்கு பக்தர்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்க அங்கி ஊர்வலம் 25-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும். பம்பையில் பாரம்பரிய முறைப்படி தேவஸ்தான ஊழியர்கள் தங்க அங்கியை பெற்றுக் கொண்டு, மேளதாளம் முழங்க தலைச் சுமையாக சன்னிதானம் கொண்டு செல்வார்கள். பதினெட்டாம் படிக்கு கீழ் பகுதியில் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்று கொள்வார்கள்.

பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு, ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். மறுநாள் 26-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் சபரிமலை கோவிலில் நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் 6 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

முன்னதாக திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும். கொரோனா காரணமாக இந்த ஆண்டு, 100 பேர் மட்டுமே திருவாபரண ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com