ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்ட போது எடுத்த படம்.
தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்ட போது எடுத்த படம்.
Published on

 சபரிமலை :

சபரிமலை  ஐயப்பன் கோவிலில் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று ஐயப்பனுக்கு தங்கத்திலான அங்கி அணிவித்து பூஜை நடைபெறுகிறது.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி, தற்போது பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த  தங்க அங்கி  நேற்று ஊர்வலமாக புறப்பட்டது.

இதையொட்டி காலை 6 மணிக்கு பார்த்த சாரதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பார்த்த சாரதி கோவிலில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தங்க அங்கி  ஊர்வலம் சபரிமலைக்கு வரும் வழிகளில் பக்தர்கள் வரவேற்பு அளிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தங்க அங்கி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் போலீசார் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும்.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் ஓமல்லூர், கோன்னி, பெரி நாடு ஆகிய இடங்களில் வழக்கமாக இரவு ஓய்வெடுப்பது வழக்கம். அந்த கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்க அங்கி ஊர்வலம் 25-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும். பம்பையில் பாரம்பரிய முறைப்படி தேவஸ்தான ஊழியர்கள் தங்க அங்கி யினை பெற்றுக் கொண்டு, மேளதாளம் முழங்க தலைச் சுமையாக சன்னிதானம் கொண்டு செல்வார்கள்.

அவ்வாறு கொண்டு வரப்படும் தங்க அங்கியினை பதினெட்டாம் படிக்கு கீழ் பகுதியில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொள்வார்கள்.

பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு, ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

26-ந்தேதி பகல் 12 மணிக்கு மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் சபரிமலைஐயப்பன் கோவிலில் நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் 6 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும்  மகர விளக்கு பூஜை க்காக சபரிமலைஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்திப் பெற்ற மகர விளக்கு பூஜை 2021-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும். கொரோனா காரணமாக இந்த ஆண்டு, 100 பேர் மட்டுமே திருவாபரண ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com