பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது

பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
தாரகாசூரன் வதம் செய்யப்பட்ட பின்பு அவரின் தலை எடுத்து செல்லும் காட்சி.
தாரகாசூரன் வதம் செய்யப்பட்ட பின்பு அவரின் தலை எடுத்து செல்லும் காட்சி.
Published on

தமிழ்கடவுளான முருகப்பெருமான் தேவர்களை காக்க சூரர்களுடன் போர் புரிந்த நிகழ்வே ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் 6-ம் திருநாளான நேற்று மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சின்னக்குமாரருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கசப்பரத்தில், வில்-அம்பு, கேடயம், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பின் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சூரனை வதம் செய்வதற்காக வில்-அம்பு, கேடயத்துடன் சின்னக்குமாரர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டார். அவருடன் வீரபாகு, நவவீரர்கள் ஆகியோரும் புறப்பட்டனர்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சூரபத்மன், முருகனுடன் போர் புரியும் வகையில் புறப்பட்டு வடக்கு கிரிவீதி அடைதலும், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பாதவிநாயகர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன் ஆகியோர் நான்குரத வீதிகளில் போர் முரசு கொட்டியபடி அடிவாரம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து தங்கசப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், மாலை 5.30 மணிக்கு பாதவிநாயகர் கோவில் வந்தடைந்தார். அங்கு வில்-அம்பு, கேடயத்துடன் பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அதையடுத்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு பராசக்தி வேல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து சின்னக்குமாரருடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீரபாகு மற்றும் நவவீரர்கள் போருக்கு புறப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக் குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற குருக்கள் தாரகாசூரனை சம்ஹாரம் செய்தனர். அதைத்தொடர்ந்து கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. அதன் பின்னர் இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும், ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழாவும் நடைபெற்றது. சக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜைக்கு பின்பு கோவில் நடைதிறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பழனி கிரிவீதிகளில் பக்தர்கள் அலைகடல்போல் திரண்டு இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது கிரிவீதி களை இழந்து இருந்தது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சி சுமார் 1½ மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, சப்-கலெக்டர் அசோகன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் 7-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) மலைக்கோவிலில் காலை 8 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com