

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-வது படை வீடான இக்கோவிலில் முருகன் சுவாமிநாதசாமியாக அருள்பாலித்து வருகிறார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தையாகிய சிவனுக்கு உபதேசித்த தலம் என்பதால் ‘தகப்பன் சாமி’ என்ற பெயரும் இக்கோவில் முருகனுக்கு உண்டு.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. நேற்று கொடியேற்றத்தையொட்டி உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் கொடி மரம் அருகே எழுந்தருளினார். இதையடுத்து யானை உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. முன்னதாக சாமி, மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமிநாதசாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
8-ந் தேதி தைப்பூச தினத்தன்று அதிகாலை விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து சுவாமிநாதசாமி, வைரவேல், வைரகிரீடம் மற்றும் தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து வெள்ளி மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு உற்சவமூர்த்தி யதாஸ்தானம் திரும்பும் உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.