சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் கருட தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் கோவிலில் கருட தரிசன நிகழ்ச்சி நடந்ததையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் காணலாம்.
சுசீந்திரம் கோவிலில் கருட தரிசன நிகழ்ச்சி நடந்ததையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் காணலாம்.
Published on

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர். அவர்களுடன் வேளிமலை முருகனும், மருங்கூர் சுப்பிரமணியசாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்த பின்பு நடுத்தெருவில் உள்ள வீரமார்த்தாண்டன் கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர்.

அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியாரும் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கியதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை காண நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர். அவர்கள் கருட தரிசன நேரத்தில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 22-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com